ஞாயிறு, 29 ஜனவரி, 2012

மனிதநேய மக்கள் கட்சி தலைவராக ஜே.எஸ்.ரிபாயி போட்டியின்றி தேர்வு - தினத்தந்தி செய்தி


மனிதநேய மக்கள் கட்சி தலைவராக ஜே.எஸ்.ரிபாயி போட்டியின்றி தேர்வு - தினத்தந்தி செய்தி

E-mail Print PDF
தாம்பரம், ஜன.29

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவராக ஜே.எஸ்.ரிபாயி போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் முறையே தாம்பரம் மற்றும் மேடவாக்கத்தில் நடைபெற்றது. இதில் மாநில புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இது குறித்த த.மு.மு.க. மூத்த தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தாம்பரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:


மாநில தலைவர் ஜே.எஸ்.ரிபாயி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவராக ஜே.எஸ்.ரிபாயி, பொருளாளராக ஒ.யு.ரஹ்மத்துல்லா, த.மு.மு.க. பொதுச் செயலாளராக பி.அப்துல்சமது, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளராக தமீமுன் அன்சாரி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் நிர்வாக குழு மூத்த தலைவர்களாக நானும், ஹைதர் அலியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.

இடஒதுக்கீடு
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின் படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தானே புயலால் கடலூர், விழுப்புரம், நாகை மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்ட சேதத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் அப்பகுதி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுவது கண்டிக்கத்தக்கது. மேற்கு வங்காளத்தில் அணு உலைகளை அனுமதிக்கமாட்டோம் என அந்த மாநில அரசு அறிவித்து இருப்பது போல தமிழக அரசும் இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

ஆதரவு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிகச் சிறப்பான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். தமிழக அரசு எடுத்துவரும் மக்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி என்றும் ஆதரவாக இருக்கும்.

தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்று தர மத்திய அரசை வலியுறுத்தி த.மு.மு.க. சார்பில் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.எஸ்.ரிபாயிக்கு மூத்த தலைவர்கள் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.ஹைதர் அலி வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் யாக்கூப் நன்றி தெரிவித்தார்.

நன்றி - தினத்தந்தி 29-01-2012 பககம் 8
Last Updated ( Sunday, 29 January 2012 10:17 ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக