புதன், 9 மே, 2012

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர சட்டசபையில் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர சட்டசபையில் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை Wednesday, 09 May 2012 20:00 administrator .முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கையிலே பேசுவதற்கு வாய்ப்பளித்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் சமூக நீதி தழைத்தோங்க கூடிய ஒரு மாநிலம். நீதிக்கட்சி தொடங்கி, பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் போட்ட பாட்டையிலே 1994 ஆம் ஆண்டிலே இந்திராசானி வழக்கிலே உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிலே 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியபோது, அந்தத் தீர்ப்பு தமிழகத்தின் பாரம்பரிய சமூக நீதியைப் பாதிக்கக்கூடிய வகையிலே அமைந்தபோது, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மிகச் சிறப்பான ஒரு முடிவை எடுத்து, இந்தப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அரசியல் சாசனச் சட்டத்தினுடைய 9 ஆவது அட்டவணையிலே பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுடைய இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்ததை இந்த நேரத்திலே, தொடக்கத்திலே நன்றி கூறி, நினைவுகூற கடமைப்பட்டிருக்கிறேன். அதேபோல்தான் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இடையிலே குறுக்கிட்டுப் பேசியபோது, மீண்டும் அந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது, அவசர அரசாணையைப் பிறப்பித்து இன்று பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் தமிழகத்திலே இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு நிச்சயமாக அதிமுக அரசுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு மாநிலத்தில் இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டிற்கு மேல் செல்லக்கூடாது என்பது ஒரு நீதியான, நேர்மையான வாதம் அல்ல. உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதியரசர் ஓ. சின்னப்பரெட்டி அவர்கள் கூட ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் எத்தனை விழுக்காடு இருக்கின்றார்களோ அத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டுமென்று அவருடைய கருத்தினை பதிவு செய்திருக்கின்றார். அந்தப் பாதையிலே தொடர்ச்சியாக இந்த அரசும் நடவடிக்கை எடுத்து, தமிழகத்திலே எத்தனை விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் இடஒதுக்கீடு கொடுக்கக்கூடிய நாள் நிச்சயமாக இந்த ஆட்சியிலே வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய அதிமுக அரசு இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் நேரத்திலே கொடுத்த பல வாக்குறுதிகளை அடுக்கடுக்காக தமிழக அரசு நிறைவேற்றி வருகின்றது. விலையில்லா அரிசியாக இருக்கட்டும் அல்லது மிக்சி, கிரைண்டர், பேன் ஆக இருக்கட்டும். அதேபோல சிறுபான்மை கிறிஸ்தவ மக்களுக்கு ஜெருசலேம் செல்வதற்கான மானியமாக இருக்கட்டும், இவை எல்லாவற்றையும் நிறைவேற்றி வந்திருக்கின்றீர்கள். அதற்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். அதே நேரத்திலே, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் நேரத்திலே முஸ்லிம்களுக்காக தமிழகத்திலே இருக்கின்ற 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அதிகரித்துத் தரப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கின்றார்கள். அந்த வாக்குறுதியையும் விரைவிலே நிறைவேற்றி வைக்கப்பட வேண்டுமென்று இந்தத் தருணத்திலே மீண்டும் நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த 3.5 விழுக்காடு என்று இருப்பதனால், Roaster 200 points போட வேண்டிய சூழலிலே, அதிலே பலருக்கும் பல சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, இந்த fraction ஐ எடுத்து அதை முழுமையாக்கிவிட்டால் Roaster ஐ 100 ஆக்கி விடலாம். அதனால் எல்லோருக்கும் பலன் கிடைக்கும் என்பதை இந்த நேரத்திலே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சில துறைகளிலே, குறிப்பாக மருத்துவ மேல் படிப்பிலே, அதைபோல பல்கலைக்கலகங்களிலே இருக்கக்கூடிய சில துறைகளிலே பத்துக்கும் குறைவாக அங்கே இருக்கை இருக்கும்போது அந்த roaster முறையை நாம் அமல்படுத்தும்போது சில சமூகத்தினர் 25, 50 ஆண்டுகளுக்கு பிறகுதான் அவர்களுடைய turn வரக்கூடிய ஒரு நிலை இருக்கின்றது. இந்த முரண்பாடுகளையும் களைவதற்கு நிச்சயமாக இந்த அரசு முயற்சி எடுக்க வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்திலே தலித்-ஆக அல்லது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களாக இருக்கக்கூடியவர்கள் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டால் அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலே சேர்ப்பதற்கு ஓர் அரசாணை கடந்த காலங்களிலே போடப்பட்டு அது அமலிலே இருக்கின்றது. ஆனால், அதே நேரத்திலே தலித் ஆகவோ அல்லது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களாக இருந்து அரசியல் சாசன சட்டம் தரக்கூடிய உரிமையின் அடிப்படையிலே இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு முஸ்லிமாக மதம் மாறியவர் என்றுதான் சான்றிதல் கொடுக்கிறார்களே தவிர, ஏனென்றால் அவர்கள் S.C. க்கான உரிமையையும் இழந்து விடுகிறார்கள். B.C. க்கான உரிமையையும் இழந்துவிட்ட பிறகு அவர்களுக்கு நியாயப்படி B.C. முஸ்லிம் என்று சான்றிதல் கொடுக்க வேண்டும். அதற்கு வழி இல்லையென்று சொல்கிறார்கள். எனவே, கிறிஸ்தவத்தை தழுவிய தலித்துகளுக்கு இருப்பதுபோன்று ஓர் அரசாணை இந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட வேண்டுமென்று இந்த நேரத்திலே தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சமீபத்திலே தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம், சரியாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த ஜனவரி 2012 லே 250 சிறுபான்மை மொழி வழி ஆசிரியர்களுக்கான நேர்காணலை நடத்தியது. இதில் உருது வழி பாடங்களுக்காக 20 பணியிடங்களிலே 2 மட்டுமே நிரப்பப்பட்டிருக்கிறது. எஞ்சிய 18 இடங்கள் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு Roaster முறையிலே ஒதுக்கப்பட்டதனால், அந்த வகுப்பார்களிலே உருது படித்தவர்கள் யாரும் இல்லை என்பதன் காரணமாக இந்த 18 பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. இதுபோன்ற முரண்பாடுகளை களைவதற்கும் இந்த அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக